ஒரு புதன்கிழமை. இது 3 மாத்திற்கு முன் வெளிவந்த இந்தித் திரைப்படம். தற்போது இதன் இயக்குனர் நீரஜ்பாண்டேக்கு இப்படத்தின் மூலம் இயக்குனர் சாந்தாராம் விருது கிடைத்திருக்கிறது. இதன் கரு தீவிரவாதம் பற்றியது. இதன் வடிவம் தமிழின் ‘இந்தியன்‘ திரைப்படத்தையும், ஜப்பானின் ‘புல்லட் ட்ரெயின்‘ படத்தையும் கலந்த ஒரு மசாலா வடிவம். சில மசாலாப் படங்கள் மக்கள் மனதை கவ்விப்பிடித்து, பிற்போக்கான அல்லது மேம்போக்கான பார்வையை மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்கும் திறனுடையவை. இந்த ரகங்களில் தமிழில் வந்த ‘ஜென்டில்மேன்‘ படத்தை உதாரணமாகக் கூறலாம். நமது நாட்டில் தொழில்கல்வியும், மருத்துவ கல்வியும் தனியார்மயப்படுத்தி தெருக்களில் தொழிற்கல்வி பட்டங்கள் கூவி விற்காத குறையாக வியாபாரப்படுத்தப்பட்ட கல்விமுறையை திணித்தது உலகமயமாக்கல். ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் வாயிலாக, இடஒதுக்கீட்டின் மூலம், திறமைசாலிக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், இந்த கொள்கையை அமல்படுத்தும் முறை மோசம் என்றும் கூறி கல்வியை வியாபாரமயமாக்கி சமூகத்தை காயப்படுத்திய உலகமயமாக்கல் கொள்கையை மூடி மறைப்பதோடல்லாமல் தனியார்மயமானால் இடஒதுக்கீடு இருக்காது; திறமைசாலிகள் படிக்க முடியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இப்படம். அதுவும் உலகமயமாக்கல் அமல்படுத்தித் துவங்கிய காலகட்டத்தில் வந்தது. இதன் வரிசையில் தற்போது வந்தததுதான் ‘ஒரு புதன்கிழமை‘ திரைப்படம்.
இப்படத்தின் சிறப்பம்சம்: இதில் காதல் கிடையாது, பாடல்கள் கிடையாது, சண்டை கிடையாது. எனவே இது மசாலப்படமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அனுபம் கேர் மற்றும் நஸிருதீன் ஷா ஆகிய நடிகர்களின் பாத்திரமே பிரதானமானது. ஓய்வு பெற்ற மும்பய் நகர போலீஸ் கமிஷன் தன்னுடைய கடைசி நாள் பணியின் அனுபவம் பற்றி கூறுவதாக கதையைத் துவங்குகிறார். பெரியவர் ஒருவர் (நஸிருதீன் ஷா) மும்பய் போலீஸ் கமிஷனர் (அனுபம் கேர்) அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் தன்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டதாக கூறி புகார் கொடுக்கச் சென்று அங்கு வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்புகிறார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டு, நவீனக் கருவிகளின் துணையுடன் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு தான் மும்பயில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு முக்கிய முஸ்லீம் தீவிரவாதிகளை விடுவிக்க முன்வந்தால், குண்டு வைத்த இடங்களை சொல்வதாகவும் கூறுகிறார். அசட்டை செய்த போலீஸ் கமிஷனரிடம் ‘நான் குண்டு வைத்ததை நம்பவில்லை என்றால், உங்கள் அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறேன்; அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறார். கமிஷனரிடம் பேசும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டின் சிம்கார்டை பயன்படுத்துவதால் இவருடைய இடத்தை மோப்பம் பிடிப்பதற்கு காவல்துறைக்கு சிரமப்படுகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி நபரை தொடர்பு கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றால், உங்களுக்கு நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டிய பரபரப்பான செய்தி கிடைக்கும் என்று கூறவே, அத்தொலைக்காட்சியும் உபகரணங்களுடன் அங்கு சென்று நேரடி ஒளிபரப்பை துவங்குகிறது. மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும் பெரியவருக்கு அங்கு நடப்பது தொலைக்காட்சிமூலம் தெரியவர, தன்னுடைய அடுத்த காயை நகர்த்துகிறார் பெரியவர்.
இப்பொழுது தான் குறிப்பிடும் நான் முஸ்லீம் தீவிரவாதிகளை தான் சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து விட்டால், குண்டு வைக்கப்பட்டிருக்கும் இடங்களை கூறுவதாக கூறுகிறார். கமிஷனரும் முதலமைச்சரும் கூடி பேசி முடிவெடுத்து நான்கு தீவிரவாதிகளை விடுவிப்பதாகவும், பெரியவர் சொல்லும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதாகவும் உறுதியளிக்கின்றனர். இதற்கிடையில், பெரியவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அவரை கண்டுபிடிக்க ஒரு கணிணி சங்கேத நிபுணரை (Hacker) அழைத்து பணியில் ஈடுபடுத்துகின்றனர். ஆரம்பத்தில் புகார் வாங்கிய காவலரின் உதவியுடன் பெரியவரின் படம் வரையப்படுகிற்து. தீவிரவாதிகள், பெரியவர் கூறும் இடத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கு உள்ள மேடையில் அவர்களை விட்டுவிட்டு காவலரை நகரச் சொல்கிறார். பிறகு ஒரு தொலைபேசி அந்த மேடையின் கீழ் ஒலிக்கிறது. தொலைபேசியை தீவிரவாதி ஒருவன் எடுத்து பேசு பித்தானை அழுத்தியவுடன் குண்டு வெடித்து மூவர் இறந்து போகிறான். நான்காவது ஆளை பிடித்து வைத்துள்ள காவரிடமும் காவல்துறையுடனும் பெரியவர் ஒரு நீண்ட உரை நிகழ்த்துகிறார். பல வெடிகுண்டு சம்பங்களுக்கு பொறுப்பானவர்களை அரசு ஒன்றுமே செய்யவில்லை. எனவே தான் திட்டம் தீட்டி அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் மீதமிருக்கும் ஒருவரையும் நீங்கள் சுட்டுக் கொன்றால், குண்டு வைத்திருக்கும் இடங்களை கூறுவதாகவும் கூறுகிறார். அந்த தீவிரவாதியும் சுடப்படுகிறான். பெரியவரின் வீர உரையைக் கேட்ட கணிணி நிபுணரும் அவர் இருக்குமிடம் பற்றி தான் கூறியதாக சொன்ன தகவல் தவறு என்று கூறி பெரிவர் நல்ல மனிதன் என்று கூறுகிறார். பெரியவரின் படத்தை வரைவதற்கு உதவிய காவலரும் படத்தில் உள்ளவர் போன்று அந்த மனிதர் இருக்க மாட்டார் என்று பின்வாங்குகிறார். பெரியவர் கமிஷனர் இருக்குமிடத்திற்கு விரைகிறார், அதற்குள் பெரியவர் அவருடைய உபகரணங்களை அழித்துவிடுகிறார். கமிஷனர், பெரியவரை பார்த்து சாதாரணமாக பேசிவிட்டு கதையை முடிக்கிறார்.
இதை ஒரு மசாலாப்படம் என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. படத்தில் பெரியவர் தன்னை ஒரு சாதாரண மனிதன் (Common Man) என்றும் தன்னுடைய குரல் சாதாரண மனிதனின் குரல் என்றும் கூறுகிறார்; ஆனால் அவரின் செய்கைகள் பராக்கிரமங்கள் எதுவும் சாதரண மனிதனின் நடவடிக்கைக்குள் வராது. கமிஷனரிடம் பேசும் பெரியவரின் நீண்ட உரையானது வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது. அதில் பெரியவர் ஒரு சிறிய கைப்பெட்டியை வைத்துக் கொள்டு மும்பய் புறநகர் ரயிலில் பயணம் செய்பவராக காண்பிக்கப்படுகிறார். இது சாதராண மனிதன் தான். ரயில் குண்டு வெடிப்பின்போது பாதிக்கப்ட்டவர்களின் கதையை அந்த உரையில் கூறுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதன் பல்வேறு நாடுகளில் இயங்கும் தொலைபேசி நிறுவனங்களின் சிம்கார்டுகளை பெற்றதெப்படி? ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பையை காவல்நிலையத்தில் வைக்குமளவிற்கு துணிச்சல் எப்படி வந்ததது? சுhதரண மனிதன் ஜுஹு பீச் விமானதளத்தில் ஒரு மேடையைப் போட்டு அதனடியில் வெடிகுண்டு வைத்துச் செல்வது இயலாத காரியம். சாதாரண மனிதன் போலீஸ் கமிஷனரிடம் பேரம் பேசி மிரட்டல்காரனாகவும் இருக்க முடியாது. அதுவும் வீட்டிலிருந்து மனைவி தொலைபேசியில் அழைத்து, வீட்டிற்கு திரும்பும் பொழுது தக்காளி வாங்கிக் கொண்டு வரும்படி கூறும் அளவிற்கு சாதாரண மனிதன்.
படத்தில் காதல் பாட்டு சண்டையெல்லாமில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்கு புல்லட் ட்ரெயின் உத்தி பயன்பட்டிருக்கிறது எனினும் இது பாராட்டப்பட வேண்டியதே. எனினும் படத்தின் மையக் கருவான தீவிரவாதம் பற்றிய புரிதல் மிகவும் கோளாருடையது; ஆபத்தானது. தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றிய எந்த ஆய்வும் தேடலும் படத்தில் இல்லை; பெரியவரின் உரையிலும், குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகள் சொல்லும் நியாயங்களே அவர்களை கொல்வதற்கும் வைக்கப்படுகிறது. நீண்டகாலம் நியாயம் கிடைக்காத குற்றத்திற்கு, தன்னைப் போன்ற சாதராண மனிதன் நியாயம் வழங்க முன்வந்திருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொண்டால், இதே போனற் வாதம் குஜராத் படுகொலைகள், மற்ற வகுப்பு கலவரங்கள், ஒரிஸா படுகொலைகள் செய்த யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் தீவரவாதிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். பெரியவர் நிகழ்த்தும் உரைகளில் இதுவரை நடைபெற்ற அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் மாலேகான் உள்ளிட்ட இந்து தீவிரவாதிகள் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையும் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அவர் பழிவாங்க முன்வந்திருப்பது நான்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமே. ஏன் ஒரு பிரக்ஞ்யா தாக்கூர் சேர்க்கப்படவில்லை? படம் எடுக்கும் பொழுது இந்துத் தீவிரவாதிகளும் குண்டு வைத்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகவில்லை என்றாலும் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லீம் தீவரவாதிகளே காரணம் என்று போகிற போக்கில் கூறுவதுதான் ஆபத்தானது. தற்போது இந்துத் தீவிரவாதம் அம்பலமான நிலையிலும் தற்போது எந்த இயக்குனராவது பிரக்ஞ்யா தாக்கூர் போன்றவர்களை மையமாக வைத்து படம் எடுக்க முடியும்? எடுத்தாலும் படத்தை ஓட விட்டுவிடுவார்களா? அதற்கு சாந்தாராம் விருது கிடைக்குமா? அப்பொழுது விசாரணை முடியும்வரை குற்றவாளி என்ற தீர்ப்பு கூறமுடியாது என்ற வாதமும், மனித உரிமை குரலும் ஓங்கி ஒலிக்கும். மும்பய் நகரின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன் பற்றி பேசும் இயக்குனர், இந்து வகுப்புவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட இன்னொரு ரக சாதாரண மனிதர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? அது கதையின் கரு இல்லையென்றாலும் இவரின் படைப்பு மக்களிடத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது நமது நாட்டில் வாழும் இன்னொரு சாரார் பிரச்சனைகளை முற்றிலுமாக நிராகரித்து அவர்கள் மனிதர்களே இல்லையென்று புறமொதுக்கும் கயமைத்தனமே இப்படம் ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். பிடிபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பதை விசாரணையால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் “சாதாரண மனிதன்“ அவரே முடிவு செய்து அவரே தண்டனை வழங்குவது என்பது கட்டை பஞ்சாயத்தைவிட கேவலமானது. மாலேகான் குண்டு வெடிப்பு நடத்தியவர்களும் இந்த “சாதாரண மனிதன்“ கூறுவதையேதான் கூறுகிறார்கள். பல நேரங்களில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையே. அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் மோடி, தெகாடியா, அத்வானி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கும் பொழுது நீதி எப்படி சுயமாக இயங்க முடியும்? கலைஞன் என்பவன் பிரச்சனையை பொதுவாக பார்ப்பவனாக இருக்க வேண்டும், பிரச்சனைகளின் ஆணிவேரை தேடுபவனாக இருக்க வேண்டும். இந்த குணாம்சமில்லாத கலைஞனின் மனவினைத் திறத்தால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. நீரஜ்பாண்டேக்கு சினிமா அழகியல் தெரிந்திருந்தாலும் அவரது படைப்புகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படைப்பு மக்களை தவறான வழியில் கொண்டு செல்லும் நோக்கமுடையது.
December 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment