December 3, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-5

கழுதை விளையாட்டு

சீட்டு விளையாட்டில் 'கழுதை' என்று ஒரு விளையாட்டுண்டு. ஆடுபவர்கள் தங்களிடமுள்ள கழுதைச் சீட்டை அடுத்தவரிடம் தள்ளிவிட முயற்சிப்பார். இறுதியில் யாரிடம் கழுதை அதிகமாக இருக்கிறதோ அவர் தோல்வியுறுவார். என்ரான் ஒப்பந்தமும் மீண்டும் கழுதைச் சீட்டு மாதிரி காங்கிரஸ அரசாங்த்திடமே வந்துவிட்டது. என்ரான் தன்னுடைய முதல் கட்ட நிர்மாணப் பணிகளை முடித்து மகாராஷ்ட்ர மின்வாரியத்திடம் மின்சாரத்தை விற்க ஆரம்பித்தது. அதனுடைய "மீட்டர்" ஓட ஆரம்பித்தது. இடதுசாரிகள் மீண்டும் கூக்குரலிட ஆரம்பித்தார்கள். விளைவு மகாராஷ்ட்ர அரசு கோட்போலே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்ததது.

கோட்போலே கமிட்டி அறிக்கை

என்ரானுடைய விலை நிர்ணயக் கொள்கையானது நியாயமானதல்ல, தர்க்க ரீதியாதல்ல என்ற முடிவுக்கே கோட்போலே கமிட்டி வந்தது. மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் (Power Purchase Agreement) தலைகீழ் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ர அரசு முயல வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு என்ரான் உடன்படவில்லையென்றால், என்ரான் நிறுவனம் யாருக்கு வேண்டுமானலும் மின்சாரத்தை விற்றுக் கொள்ள அனுமதி வழங்கி, மின்வாரியத்தை என்ரான் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோட்போலே கமிட்டி கூறியது. ஏழு பேர் கொண்ட கமிட்டியில் ஒரு கருத்து வேறுபாடும் நிலவியது. என்ரான் விஷயத்தில் நடந்து போன விஷயங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது என்று தெரிந்திருந்தும், கையாண்டவர்கள் ஏன் இதை அனுமதித்தனர்? இதற்குள் ஒரு மாபெரும் ஊழல் அடங்கியிருக்கிறது; எனவே இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கமிட்டியில் ஒருசாராரும், இதற்குள் சென்றால் பண்டோரா பெட்டியை திறந்த கதையாகிவிடும்; ஆகவே மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தடைபடும் என்று மற்றொரு சாரரும் பிணங்கி நின்றனர்.

கோட்போலே கமிட்டியும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியது. மின்வாரியம் இயற்கைக்கும் நடைமுறைக்கும் விதிமுறைகளுக்கும் புறம்பாக வருடத்திற்கு 930 கோடி அதிகம் செலுத்துமாறு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது என்று இடித்துரைத்தது. என்ரான் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதாக கூறியது. இயற்கை எரிவாயுவை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு ஆலையை நிர்மாணித்து அதை இயக்க வேண்டும். இதற்கான மொத்த செலவையும் மின் கொள்முதல் ஒப்பந்ததத்திற்குள் கொண்டு வந்தது. இதைத்தவிர இயற்கை எரிவாயு திரவ ஆலையை தேவையைவிட இருமடங்கு பெரிதாக நிர்மானித்து அதன் திறனில் 50 சதம் மட்டுமே மின் நிலையத்திற்கு பயன்படுத்திக் கொண்டு மீதித்திறனை இதர நிறுவனங்களுக்கு விற்று வந்தது. எனினும் மொத்த செலவையும் மின்வாரியத்திடமிருந்து வசூல் செய்து மோசடி செய்தது என்று கமிட்டி அறிவித்தது. இதைவிட இயற்கை எரிவாயுவை கையாண்டதற்கு துறைமுகச் செலவு உள்ளிட்ட மேலும் பல செலவுகளை மூலதன மீட்பு (Capital Recovery) செலவாக வசூலித்துக் கொண்டது. இறுதியாக கோட்போலே கமிட்டியானது மற்ற செலவுகளை அதிகம் தேடாமல் நேரடியாக மட்டுமே 930 கோடி அதிகம் என்ரானுக்கு செலுத்தியிருப்பதாக கூறியது. இதைத்தவிர, இயற்கை எரிவாயு சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தில் மாற்ற வேண்டும், இயங்கு பாரத்தையும் 30 - 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தமிது; சிவசேனை - பாஜக அரசால் மறுபேச்சு நடத்தி உறுதி செய்த ஒப்பந்தமானது, மீண்டும் காங்கிரஸ அரசாங்கத்தால் கையாளப்படும் போது மோசடி செய்யப்பட்ட தொகையை கையகப்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

தொடரப்பட்ட ரிட் மனு

நமது நாட்டு சட்டப்படி ஒவ்வொரு மின்திட்டத்தையும் மத்திய மின் ஆணையம் பரிசீலித்து தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். என்ரான் விஷயத்தில் இது நடைபெறவில்லை . இதனை எதிர்த்து சிஐடியூவைச் சேர்ந்து அபய்மேத்தா மத்திய மின் ஆணையம் தன்னுடைய கடமையை செய்ய தவறிவிட்டத என்று வழக்கை தொடர்ந்தார்.

என்ரான் தூக்கிய போர்க்கொடி

கோட்போலே முடிவு தனக்கு எதிராக வரும் என்று என்ரான் நிறுவனம் "எதிர்பாராத அரசியல் நிகழ்வு" (Political Force Majure) என்று போர்க்கொடியை உயர்த்தியது. தபோல் மின்நிலையம் சம்பந்தமாக, மத்திய மாநில அரசுகளோ, தனிநபர்களோ இதர நிறுவனங்களோ இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது என்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் 10-10-2001 அன்று ஒரு தலைபட்சமான (Ex-parte) ஒரு தடையாணையை வாங்கியது. தனக்கும் மகாராஷ்ட்ர மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை இந்திய-அமெரிக்க நல்லுறவு பிரச்சனையாக மாற்றியது. இந்திய அமெரிக்க உறவு என்பது ENRON என்ற ஐந்து எழுத்தில்தான் இருக்கிறது என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பிளாக்வில் மிரட்டல் விடுத்தார். வாஜ்பாய் அரசாங்கமும் மிரட்டலுக்கு அடிபணிந்து தபோல் மின்நிலையத்தில் என்ரானின் பங்குகளை நூறு கோடி டாலருக்கும் (ரூ 4500 கோடி) அதிகமாக விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்புக் கொண்டு இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 2001 ல் வாஜ்பாய் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க பயணத்தில் கையெழுத்தாவதாக இருந்தது.

என்ரானின் மரணம்

இதற்கிடையில என்ரான் நிறுவனம் பல ஆண்டுகளாக செய்து வந்த பல மோசடிகள் அம்பலமாகி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திற்குள் சரிந்து விழுந்து விட்டது. நிறுவனம் மூடப்பட்டு பங்குதாரர்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டு விட்டது ஏனென்றால் அதன் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்து பூஜ்யத்தை எட்டிவிட்டது. இதன் தலைவர் கென்னத் லே ஜெயிலில் பிடித்து அடைக்கப்பட்டார். இந்திய மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

இப்படிப்பட்ட விலை உயர்வான பரிசோதனையை இந்திய அரசாங்கமானது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் செய்து முடித்தது. காரணம் முடிவெடுக்க வேண்டிய நிலையிலிருந்த மன்மோகன்சிங்லிருந்து மன்டேக் சிங் அலுவாலியா வரை ஏகாதிபத்திய சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு ஏற்பவர்கள். இதனால்தான் இதே போன்றதொரு பரிசோதனையை மீண்டும் நடத்த 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பதின் வாயிலாக முயற்சிக்கிறார்கள்.

September 25, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-4

என்ரானை கையாண்ட மூன்றாவது மகாராஷ்ட்ர அரசு

மன்மோகன்சிங் 1991ல் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக மின்உற்பத்தி தனியார்மயமானது. இதையொட்டி மின் உற்பத்தி செய்ய தனியார்களை அனுமதிக்கும் வேகப்பாதை திட்டங்கள் (Fast Track Projects) ஆறு உருவாயின. அதில் ஒன்று தபோல் மின்திட்டம். இது என்ரான் நிறுவனத்துடன் சரத்பவார் தலைமையிலான மாநில காங்கிரஸ அரசாங்கம் செய்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தையே அடித்தளமாகக் கொண்டு 1993ல் திருத்தப்பட்ட இந்திய மின்சார சட்டம். என்ரான் ஒப்பந்தத்தின் விளைவாக அதிக விலை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை இறக்குமதி செய்வது. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலைகொடுத்து மகாராஷ்ட்ர மின்வாரியம் வாங்குவது ஆகியவை விரைவில் மின்வாரியத்தை போண்டியாக்கிவிடும் என்று கூக்குரல் எழுந்ததால், எதிர்கட்சியான சிவசேனாவும பாஜகவும் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று முழக்கமிட்டு 1994ல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஒப்பந்ததத்தை ரத்து செய்யவில்லை முதல் கட்ட பணிகள் நடைபெறுவதற்கு அனுமதித்துவிட்டு 1995ல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் முதல் கட்டம் மட்டுமின்றி இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கினார்கள். மின்கொள்முதல் ஒப்பந்ததத்திலும் எந்த மாறுதலும் செய்யவில்லை. இத்துடன் இவர்கள் ஆட்சியும் முடிந்து போயிற்று என்ரானின் முதல் கட்ட மின்நிலைய கட்டுமானப் பணிகளும் முடிந்து போயிற்று. என்ரான் மின் உற்பத்தியும் துவங்கியது. என்ரானின் மீட்டர் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கியது. 1999ல் விலாஸராவ்தேஷ்முக் தலைமையில் மீண்டும் காங்கிரஸ அரசாங்கம் உருவானது. போன சனி மீண்டும் வந்தது என்ற உணர்வுடன் மீண்டும் என்ரான் பிரச்சனை காங்கரஸிற்கே வந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானபோது கணக்கிட்டதைப் போல் ஒரு யூனிட்டிற்கு ரூ2.40 என்ரானுக்கு செலுத்த வேண்டும் என்பது பொய்யாகி யூனிட்டிற்கு ரூ7.20 செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மின்சார வாரியம் மட்டுமல்ல மகாராஷ்ட்ர அரசே போண்டியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு முதல் ஆண்டில் மட்டும் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

போண்டியாகும் மகாராஷ்ட்ர மின்வாரியம்:

ஏற்கனவே குறிப்பிட்டபடி முதல் கட்ட மின்நிலையத்தின் உற்பத்தி திறன் 740 மெ. வாட். ஓப்பந்தப்படி அடிப்படை இயங்குபாரம் 625 மெ.வாட். உச்சகட்ட இயங்குபாரம் 695 மெ.வாட். மூலதனச் செலவானது 625 மெ.வாட் உற்பத்தி செய்தால் யூனிட்க்கு எவ்வளவு வருமோ அதையே 695 மெ. வாட் உற்பத்தி செய்த போதும் வசூல் செய்தது. சிவசேனா அரசு மறு பேச்சுவார்த்தைக்குப்பின் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டம் 489 கோடியாக குறைக்கப்பட்டது என்று வாதிட்டாலும் டாலர் விலை ரூ32 லிருந்து ரூ36 ஆக உயர்ந்ததால் நஷ்டம் ஆண்டுக்கு 551 கோடியாக உயர்ந்தது. மின்வாரியத்தின் வருமானத்தில் 52 சதமானம் 20 சதம் மின்சாரத்தை மட்டுமே கொடுத்த என்ரானுக்கே போய்ச் சேர்ந்தது. திரு பிரயாஷ் தலைமையில் இளம் நிபுணர்கள் குழு ஆராய்ந்ததில் என்ரானால் வருடத்திற்கு ரூ3000 கோடி நஷ்டம் வரும் என்று மதிப்பிடப்பட்டது. இது இரண்டாம் கட்டமும் உற்பத்தியைத் துவங்கினால் ஆண்டுக்கு ஏற்படும் ரூ1600 கோடி நஷ்டத்தையும் உள்ளடக்கியது.

மின் கொள்முதல் ஒப்பந்ததத்தில் 83 சத இயங்குபாரம் என்பதும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்ர மின்வாரியத்தின் மொத்த மின்விநியோக கொள்ளவு 7000 மெ. வாட். இரண்டடாம் கட்டம் உற்பத்தியை துவங்கினால் என்ரான் மட்டும் 2000 மெ. வாட்டிற்கு மேல் கொடுக்கும். குறைந்த கட்ட இயங்கு பாரமானது 60 சதமாக இருக்கும் பொழுது விநியோகிக்கும் மின்சாரத்தில் 50 சதத்திற்கு மேல் என்ரானுடையதாகவே இருக்கும். என்ரானுக்கு 83 சத இயங்குபாரம் கொடுக்க வேண்டுமானால் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் இதர மின்நிலையங்களை நிறுத்த வேண்டும். மறுபேச்சு வார்த்தைக்குப்பின் எரிபொருள் திரவமாக்கப்பட்ட இயற்கைவாயுவாக மாற்றப்பட்டது; இது முந்தைய எரிபொருளான நாப்தாவைவிட மலிவானது என்று வாதிடப்பட்டது. இது உண்மையே. எனினும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தேவையான துறைமுக கட்டமைப்புக்கும் அதை திரவமாக நீடித்திருக்க தேவையான கட்டமைப்புக்கும் தேவையான மூலதனம் எரிபொருள் செலவில் சேர்க்கப்படும். இது எரிபொருளை உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் கொடுக்க வேண்டும். இதன்விளைவாக மின்வாரியமானது தன்னுடைய வருமானமான ரூ12500 கோடியில் என்ரானுக்கு மட்டும் முதலாமாண்டில் மட்டும் ரூ 6500 செலுத்தியது. மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் மின்வாரியமானது தன்னுடைய 10000 மெ வாட் மின்உற்பத்தி நிலையங்களை என்ரானுக்கு கொடுக்க வேண்டியதிருக்கும்.

அன்னிய நேரடி மூலதனம் என்ரான் வழியாக வந்ததா?

மன்மோகன்சிங் சித்தாந்தப்படி இந்தியாவிற்குள் இந்த ஒப்பந்ததத்தால்அன்னிய நேரடி முலதனம் வந்ததா என்றால், சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றே சொல்ல வேண்டும். என்ரானின் இரண்டு கட்டங்களையும் சேர்த்தால் ரூ10000 கோடி மூலதனம் வருகிறது. இதில் 60 சதத்தை என்ரான் கொண்டுவந்தால் 6000 கோடி அன்னிய மூலதனம் கிடைத்திருக்கம். இதற்கு எதிராக, சர்வதேச சந்தையில் மாறிவரும் நாணய மதிப்பும் ஏறிவரும் எண்ணெய் விலையையும் சேர்த்தால் மின்நிலையத்தின் ஆயுட்காலமான 20 வருடத்தில் ரூ1,00,000 கோடி அன்னியச் செலவாணியை எரிபொருள் வாங்குவதற்கே செலவிட்டிருக்க வேண்டும். என்ரான் எதுவும் கொண்டு வரவில்லை என்பது வேறு விஷயம். நிலமை மோசமாகிக் கொண்டே போனதால் மின்வாரியமானது நஷ்டத்தை தாங்கமுடியாமல் அரசை நிர்பந்திக்க ஆரம்பித்தது. எனவே தேஷ்முக் அரசானது கோட்பாலே என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை, என்ரான் பிரச்சனை பற்றி ஆராய நியமித்தது. கோட்பாலே கமிட்டியின் கண்டுபிடிப்புகள் என்ன என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

September 21, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-3

ஒப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா?

அரபிக்கடலில் ஒப்பந்தத்தை தூக்கி எறிவேன் என்று கூறி 1994ல் ஆட்சி வந்த சிவசேனா-பாஜக அரசானது என்ன செய்திருக்க வேண்டும்? ஓராண்டு மட்டுமே நடைபெற்ற கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவு போட்டிருக்க வேண்டும். மாறாக வேலைகள் நடைபெறுவதை அனுமதித்தது. பிறகு ஓராண்டு கழித்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறி மறுபேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தை முடிவில் முதல் கட்டம் மட்டுமல்ல இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கியது. பேச்சு வார்த்தைக்குப்பின் இரண்டாம் கட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் குறைத்ததாக கூறியது. முதல் கட்டத்தின் 695 மெவாட் மின் உற்பத்தி திறன் 826 மெ வாட் திறனாக உயர்த்தப்பட்டதாக பேசப்பட்டது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படவிருந்த இழப்பு குறைக்கப்பட்டது என்று கூறியது.

என்ரான் ஒப்பந்தம் மூலமாக காங்கிரசு அரசு ஊழல் செய்து விட்டது என்று மகாராஷ்ட்ர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக, அதிகாரம் கையில் வந்தவுடன், இந்திய அரசியல்வாதிகளுக்கு கையூட்டு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதே என்ரானுடன் மறு ஒப்பந்தம் செய்தது பாஜக. மறுபுறம் என்ரான் நிறுவனமானது இத்திட்டத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுக்கும் முடிவெடுப்பவர்களுக்கும் கல்வியூட்டிய வகையில் செலவு 20 மில்லியன் டாலர் என்று கணக்கெழுதியது; பாஜக தலைவர் அத்வானியும் என்ரான் வியாபாரப் பள்ளியைப் (Enron School of Business Management) பாராட்டிப் பேசினார்.

13ம் நாள் கூத்து

இது ஒருபுறமிருக்க, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும்போது மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசுவழங்கவேண்டும் என்று முதல் ஒப்பந்தத்தில் உள்ளது. இது மட்டுமல்ல, என்ரானுக்கு மகாராஷ்ர அரசிடமிருந்தோ, மின்வாரியத்திடமிருந்தோ ஏதாவது தொகை நிலுவையில் இருந்தால், அதை மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கிவிட்டு மகாராஷ்ட்ரா அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய வேறு நிதியிலிருந்து பிடித்துக் கொள்ளலாம் என்ற மறுபிணை ஒப்பந்தத்தை (Counter Guarantee) மத்திய அரசு என்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாமல் 1996ல் வெறும் 13 நாட்களே ஆட்சி செய்த பாஜக அரசாங்கமானது 13ம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடந்த அன்று உணவு இடைவேளையின்போது மந்திரிசபையைக் கூட்டி இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது, தீர்மானம் என்ரான் மறுபிணை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது. இரண்டாவது பெரும்பான்மையில்லாததால் ராஜினாமா செய்வது. ஆக, இன்று 123 ஒப்பந்தத்தை எதிர்க்கிறேன் என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடாமல் மூன்று நாட்கள் சபையை முடக்கியவர்களின் நோக்கம் என்ன என்பது என்ரான் விஷயத்தில் இவர்களின் நடத்தையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மோசடி பேச்சுவார்த்தை!

மறுபேச்சுவார்தைக்குப்பின் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு ஆண்டிற்கு 600 கோடியிலிருந்து 550 கோடியாக குறைந்தது போல் தோற்றம் ஏற்பட்டாலும் எரிபொருள் விலையேற்றத்தால் இதைவிட அதிகமான இழப்பே ஏற்படும். முதல் கட்ட மின்உற்பத்தித் திறனை அதிகரித்தாக கூறியதும் கணக்கில் தில்லுமுல்லு செய்து காட்டப்பட்டதே. இதுவும் கூட இருசக்கர வாகனங்கத்தை விற்பனை செய்யும் போது லிட்டருக்கு 100 கிமீ ஒடும் என்று விளப்பரம் செய்வதைப் போன்றதாகும். ஆனால் என்ரானுக்கு கிடைத்த மேலதிக சலுகை என்பது 83 சதவீத மின் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டதே. முந்தைய ஒப்பந்தத்தில் 40 சதவீதம் கொள்முதல் செய்தால் விடுபட்ட 43 சதவீத மின்சக்தியை உற்பத்தி செய்திருந்ததால் கிடைக்கும் லாபத்தை மட்டும் தண்டமாக கொடுக்க வேண்டும் ஆனால் சிவசேனா ஒப்பந்தத்தில் 43 சதவீதத்திதையும் உற்பத்தி செய்தாக கணக்கிட்டு முழுத்தொகையையும் கொடுக்க வேண்டும். இதைத்தவிர மின்வாரியம் 720 கோடி பங்கு மூலதனம் செலுவத்துவதை பெற்றதாக பெருமையுடன் கூறினார்கள் ஆனால் இந்த 720 கோடியை வைத்து 70:30 என்ற ஈவுக்கடன் பெற்று 2400 கோடியில் மொத்த மின்திட்டத்தையும் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில், மின் கொள்முதல் விலையில் எந்த மாறுதலும் இல்லை! எரிபொருள் இறக்குமதியிலும் எந்த மாறுதலும் இல்லை! பணம் டாலரில் செலுத்த வேண்டும் என்பதிலும் மாறுதல் இல்லை! விலை நிர்ணயிப்பு கொள்கையிலும் மாறுதல் இல்லை! ஆலை இயங்குபாரத்திலும் எந்த மாறுதலும் இல்லை! ஆனாலும் மறுபேச்சு வார்த்தையில் மின்வாரியத்திற்கு லாபமேற்பட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. பிறகென்ன மின்வாரியம் போண்டியாக வேண்டியதுதான்! மின்வாரியம் எப்படி பாதாளத்திற்குள் சென்றது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

September 18, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-2

புதிய மின்சக்தி கொள்கை:

என்ரானுக்காக மத்திய மின் உற்பத்தி சட்டம் திருத்தப்பட்டது. மின் உற்பத்திக் கொள்கைகளை திருத்துவதற்காக மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் தலைவர் டாக்டர் ரெயின்ஹார்ட் என்பவர். உலகில் மொத்தமுள்ள ஆறு மின் தளவாட உற்பத்தியார்களில் ஒன்றான சீமென்ஸ நிறுவனத்தின் இந்திய அதிகாரியே ரெயின்ஹார்ட். இவர் கூறிய பரிந்துரைகள் தனியார் மயத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டாம். கீழ்க்காணும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. உலகிலுள்ள மின்தளவாட உற்பத்தித் திறனானது ஆண்டிற்கு 1,25,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பதிலிருந்து 1,50,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பது வரை. ஆனால் ஆண்டிற்கு தேவைப்படும் மின் உற்பத்தி தளவாடங்கள் 5000 மெ வாட்டிலிருந்து 10000 மெ வாட் வரைதான். இதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. சீனா தன்னுடைய சாதகமான நிலையைப் பயன்படுத்தி கடுமையாக பேரம் நடத்தி விலைகுறைப்பை ஏற்படுத்தும் போது இந்தியா அன்னிய மின் தளவாட உற்பத்தியாளர்களுக்கு வேட்டைக் காடாக மாறிவிட்டது.

ஒருவழியாக மின்உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டது. தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் மின்சக்தி கொள்கை மாற்றப்பட்டது.

• தனியார் இடும் மூலதனத்திற்கு 16 சதம் லாபம் உத்தரவாதம்
• நீண்டகால வரி விடுமுறை
• கணக்கில் காட்டப்படும் தேய்மானம் 3.5 சதத்திலிருந்து 8.24 சதமாக உயர்வு
• அன்னியச் செலவாணி தடுமாற்றத்திலிருந்து பாதுகாப்பு
• தனியாக மின்கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement). இதில் நிரந்தர மூலதனத்தின் வட்டி, திருப்பி செலுத்துதல், இயங்கு மூலதனத்தின் வட்டி மற்றும் லாபம் ஆகியவை தனித்தனியாக உள்ளடக்கப்பட வேண்டும்
• எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி
• மின்சாரம் உற்பத்தியும் நுகர்வும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால் தேவையில்லாத நேரத்தில் கூட ஆலையை இயக்கி இயங்குதிறனில் அதிக அளவு வரும் அளவிற்கு மின்சாரம் வாங்க வேண்டும்.

இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் என்ரான் ஒப்பந்தம் போடப்பட்டது. இதே போன்று சில கொள்கைகள் அணுமின்நிலைய தனியார்மயம், அணுஉலை இறக்குமதி, எரிபொருள் வழங்கல் போன்றவைகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் இந்த கொள்கைகளை மீறி மேலும் சில சலுகைகள் என்ரானுக்கு வழங்கப்பட்டது. அது என்னவென்று பார்ப்போம்.

என்ரானின் மின்கொள்முதல் ஒப்பந்தம்:

என்ரானுக்கு 31 சதம் லாபம் உத்தரவாதம் தரப்பட்டது. 16 சதம் நேரடியான லாபம், 15 சதம் ஆலை இயங்குபார ஊக்கத்தொகை (Plant Load Factor) ஆகிய வடிவில் 31 சதமாக்கப்பட்டது. ஐந்து வருடத்திற்கு வரி விடுமுறை. மின்கொள்முதல் அன்னியச் செலவாணியில் கொடுக்க வேண்டும். மின் உற்பத்தி செய்வதற்கு கிராக்கியான எரிபொருளான எரிவாயுவைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் அதிக இயக்கச் செலவையும் மராட்டிய அரசுதான் கொடுக்க வேண்டும். இதையேதான் என்ரான் செய்தது. சர்வதேச சந்தையில் பீப்பாய் 10 டாலருக்க விற்றுக் கொண்டிருந்த கச்சா எண்ணெயின் விலை 30டாலராக உயர்ந்த பொழுது 3 மடங்கு என்ரான் மின்சாரத்திற்கு விலை கொடுக்க வேண்டியதிருந்து. இதன் விளைவாக என்ரான் மின்சாரத்தின் விலை ரூ3 லிருந்து ரூ4 ஆக ஆகிவிட்டது. டாலர் மதிப்பு 31.50 இருந்தபொழுது போட்ட ஒப்பந்தம், டாலர் மதிப்பு 40 ரூபாயாக உயர்ந்த பொழுது அதற்கும் சேர்த்து மின்சக்தி விலை கொடுக்க வேண்டியதிருந்தது.. 2002ல் டாலர் மதிப்பு உயர்ந்ததன் விளைவாக இது ரூ5 லிருந்து ரூ 7 ஆக உயர்ந்து விட்டது.மராட்டிய அரசின் இதர மின்நிலையங்கள் 60 சதத்தில் இயக்கும் பொழுது என்ரானுக்கு 83 சதம் இயக்கி அதன் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. பொதுவாக எந்தவொரு தொழிலின் லாப நட்டத்தை அதன் திறமையும் சந்தையுமே தீர்மானிக்கும், அரசு தலையிடக்கூடாது என்ற சந்தைப் பொருளாதார சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு தலையிட்டு 31 சத லாபம் உத்தரவாதம் செய்வதுதான் பெரிய நகைமுரண்.

இப்படிப்பட்ட மோசடியான விஷயத்தை என்ரான் எதிர்ப்பாளர்கள் மக்களிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றது. மகாராஷ்ட்ர தேர்தல் வேறு நெருங்கி வந்தது. உடனே எதிர்க்கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் களத்தில் குதித்தன. ஆட்சிக்கு வந்த உடனே என்ரான் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசி எறிவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தனர். தேர்தலிலும வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஓப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா? அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

September 15, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-1

ட்ராஜன் குதிரை:
இந்த இரு ஒப்பந்தங்களுக்கும் ஒத்த தன்மைகள் பல உள்ளன. இன்னும் சொல்லப் போனால் 1991ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்திக் கொள்கைக்கும் 123 ஒப்பந்தத்திற்கும்தான் ஒத்த தன்மைகள் உள்ளன. ஏனென்றால் முதலாவது விஷயம் என்ரான் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. இரண்டாவது அதைப் போன்று இன்னொன்று வரவிருப்பதை அறிவிக்கிறது.

கிரேக்க புராணக்கதையான இல்லியட்டின் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது நல்லது. ஜீயெஜ் என்ற கடவுளானவர் தன்னுடைய மகளான காஸண்டிரியாவிற்கு நடக்ககூடியதை முன்கூட்டியே கூறும் ஆற்றல் உண்டாகட்டும் என்ற ஒரு வரம் கொடுத்தார். ஆனால் ஜீயெஜின் மனைவி ஹீரா, அதாவது காஸண்டிரியாவின் அம்மா ஒரு சாபம் கொடுத்தார். அதாவது நடக்கக் கூடியதை முன்கூட்டியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதே! ட்ராய் என்ற பொய்க்கால் குதிரைக்குள் எதிரிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து காஸண்டிரியா சொன்னாலும் அதை நம்பாத ட்ராஜன்கள் அதனுள்ளே சென்று மாண்டார்கள். இதுதான் என்ரான் விஷயத்தில் நடந்தது. என்ரான் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு காஸண்டிரியா நிலமை ஏற்பட்டது. அவர்கள் 1992ல் கூறியதை யாரும் நம்பவில்லை. 2001ல் உண்மை என்று நிரூபணம்ஆகிவிட்டது.

நாய்வாலை நறுக்கி சூப்பு போட்டு நாய்க்கே கொடுத்தது:

1980களில் வேகமடைந்த ரீகனாமிக்ஸின் விளைவாக தனியார்மயம் சூடுபிடித்தது. மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை தனியார்மயத்திற்கு உட்படுத்தப்பட்டது. மின்சக்தி உற்பத்தியாளர்கள், மின் விநியோக ஏற்பாடு உடையவர்கள், விநியோகிப்பவர்கள் ஆகிய முவருக்கும் தனியார்கள். விநியோகிப்பவர் என்பவர் வெவ்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் மின்சக்தியை ஒப்பந்தம் மூலமாக மொத்தமாக வாங்கி நுகர்வோருக்கு சில்லரை விலையில் விற்பவர். நம்மவூர் மருந்துக்கடைக்காரருக்கு மருந்து உற்பத்தி பற்றி எவ்வளவு அறிவு இருக்குமோ அதே அறிவுதான் மின் விநியோகிப்பாளருக்கு மின் உற்பத்தியைப்பற்றிய அறிவு இருக்கும்.அன்று மின்சக்தி விநியோகிக்கும் நிறுவனமாக முளைத்ததுதான் என்ரான். வெகுவேகமாக என்ரான் வளர்ந்ததற்கு காரணம் அது மின்சக்தி விநியோகித்தில் ஊகவணிகமுறையை (Speculation) புகுத்தியதே. ஃப்யூச்சர் என சொல்லப்படும் ஊகவணிக முறையில் மின்சக்தியை உற்பத்தியாளர்களுடன் எதிர்கால விலை ஒப்பந்தத்தைப் போட்டு லாபம் சம்பாதித்தது. என்ரானுக்கு எந்தவித மின் உற்பத்தி அனுபவமும் கிடையாது.

இப்படிப்பட்ட மகானுபாவனுடன்தான் மன்மோகன்சிங் (மத்திய நிதியமைச்சர்), சால்வே (மின்துறை அமைச்சர்), அலுவாலியா (மத்திய நிதிச் செயலர்) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சரத்பவாரின் மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்தது. இது எரிவாயுவை பயன்படுத்தி 2015 மெ வாட் மின்நிலையத்தை மகாராஷ்டிர மாநிலம் தபோலில் அமைக்கும் ஓப்பந்தம். மின்நிலையத்தின் மொத்த விலை 2850 மில்லியன் டாலர். இதில் 2000 மில்லியன் டாலர் இந்திய நிதி நிறுவனங்களான IDBI, IFCI, SBI ஆகியவை கடனாகக் கொடுக்கும். 910 மில்லியன் டாலர் செலவில் முதல் கட்ட மின்நிலையம் உருவாகும். என்ரானுக்கு மின் உற்பத்தி அனுபவம் இல்லாதால், மின்நிலைய உபகரணத் தயாரிப்பாளரான GEக்கு10 சதவீத பங்கும், மின்நிலைய வடிவமைப்பாளரான Bechtel நிறுவனத்திற்கு 10 சதவீத பங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக யாருக்கும் மின் உற்பத்தி நிலையம் நடத்திய அனுபவம் கிடையாது. முதல் கட்ட 910 மி டாலரில் 200 மி. டாலர் என்ரான் பங்கும் இந்திய நிதி நிறுவனங்கள் 710 மி டாலர் கடன் கொடுக்கும் ஆனால் மொத்த ஆலைக்கான வடிவமைப்புச் செலவான 280 மி டாலர் ஒப்பந்தம் போட்டவுடனே எடுத்துக் கொண்டுவிடும் ஆக மொத்தம் கையெழுத்தானவுடன் 80 மி டாலர் வரவு. அதாவது 252 கோடி ரூபாய் லாபம் ஒன்றும் கொடுக்காமலேயே! நமக்கு மின்உற்பத்தி செய்து விற்பதற்கு சொந்த முதலீட்டில் மின் உற்பத்தி நிலையம் என்று கூறி ஒப்பந்தம் போட்டு 252 கோடி சம்பாதித்தது என்ரான். நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு போட்டு கொடுத்த கதைதான் இது. இந்த ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகள் எவை? ஓப்பந்தம் எவ்வாறு அமலானது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

September 14, 2007

மன்மோகன் சிங்கின் சித்தாந்தப் பிடிப்பு!

உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டாமா?

தவறு செய்தவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் நடந்த தவற்றால் எந்த பாடமும் கற்காதவர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவருடைய அதிகார வர்க்க ஆலோசகர் மான்டேக் சிங் அலுவாலியா. தற்போது 123 ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துவிட்டு, ஆட்சி போனாலும் பரவாயில்லை ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சூளுரைக்கும் மன்மோகன்சிங், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இன்னொரு என்ரான் உருவாகப்போகிறது என்று தெரிந்தேதான் செய்கிறார். ஏனென்றால் என்ரான் ஒப்பந்தத்தின் மூலகர்த்தா இவர்களே!

1000 மெ. வாட் அணு உலையானது 10000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து ஆண்டுக்கு 50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்து வருடத்திற்கு வட்டிம் முதலுமாக 2000 கோடி செலுத்த வேண்டுமானால் ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் மூலதனச் செலவு மட்டுமே ஆகிறது. இதன் பிறகு எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இயக்கச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தால் யூனிட் மின்சாரத்தின் விலை 7 ரூபாய் அடக்கவிலையாகும். மின் இழப்பு, லாபம், இயக்க மூலதன வட்டி, காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்தால் 8 ரூபாய் என்றால் இது கட்டுப்படியாகக் கூடிய விஷயமா? இதுதான் 123 ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் நடக்கப் போகிறது.

இந்தியாவை மொட்டையடிக்க காத்திருக்கும் நிறுவனங்கள்

அமெரிக்காவின் GE நிறுவனம் அல்லது Westinghouse நிறுவனம் தங்களுடைய அணுஉலைகளை வாங்குவதற்கு ஆள்கிடைக்கதாதால் புஷ் அரசை நிர்பந்தப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்து, குறைந்தது 10000 மெ. வாட் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

நஷ்டத்தை சிரமேற்கொண்டு ஏற்கும் சித்தாந்த அரசியல்!

அதாவது இந்தியா ஒருலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு அதை இயக்கத் தேவையான எரிபொருளுக்கும் அமெரிக்காவின் தயவுக்காக காத்திருந்து, இயக்கும் தினந்தோறும் நஷ்டத்தை உற்பத்தி செய்து எரிபொருள் தரமுடியாது என்றால் போட்ட முதல் ஒரு லட்சம் கோடியும் வீண் என்ற முடிவை பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் கூட எடுக்க மாட்டார். பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங்கால் மட்டுமே இப்படிப்பட்ட முடிவை எடுக்க முடியும், ஏனென்றால் இது மன்மோகன்சிங்கைப் பொருத்தவரை சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயம். தனியார்மயம், தராளமயம், அன்னிய மூலதனம் இவையே அவரின் குறிக்கோள். இதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை செய்தே தீருவது என்பதே இவரின் சித்தாந்தப் பிடிப்பு. இதே போன்ற முடிவை 1992ம் ஆண்டு என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மராட்டிய மாநிலத்தில் 2015 மெ வாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்தவர்.

இவரை ஒத்த சித்தாந்தப் பிடிப்புடைய இன்னொரு அரசியல்வாதி அருண்சௌரி. இவரும் மாடன்பிரட் நிறுவனத்தை 106 கோடிக்கு ஹிந்துஸதான் லீவர் நிறுவனத்திற்கு விற்றார். ஆனால் அதன் சொத்து மதிப்பு 2200 கோடி. 5500 கோடி மதிப்புள்ள பால்கோ நிறுவனத்தை வெறும் 551 கோடிக்கு ஸடெரிலைட் நிறுவனத்திற்கு விற்றார். கஜானாவில் 5000 கோடியை வைத்து விஎஸஎன்எல் நிறுவனத்தை 1400 கோடிக்கு டாடாவிடம் விற்றார். மும்பை விமான நிலைய சென்டூர் ஹோட்டலை பாத்ரா என்பவருக்கு 83 கோடிக்கு விற்றார். அவர் அடுத்தமாதம் அதை 115 கோடிக்கு இன்னொருவரிடம் விற்றார். இதிலெல்லாம் ஊழல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், இதற்கு மூலகாரணமான தனியார்மய சித்தாந்தம் என்பதே இங்கு முக்கியமானது. இதற்கு பிள்ளையார் சுழி என்ரான் ஒப்பந்தம் மூலமாக போடப்பட்டது. என்ரான் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

September 12, 2007

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்யும் அரசியல்:

படுபாதகமான விளைவை இந்தியமக்கள் மீது ஏற்படுத்தப்போகும் இந்திய - அமெரிக்க 123 ஒப்பந்தத்தை இந்திய மக்களிடம் சாதுர்யமாக விற்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நமது வெளிநாட்டு கொள்கையின் சுயசார்பு போய்விடும் என்பது ஒருபுறமிருக்க, அணுசக்தி ஆராய்ச்சியில் நமது முன்னேற்றம் நின்றுபோய்விடும் என்பதும் பல்வேறு துறைகளில் நமக்கு சார்பு நிலை ஏற்படும் என்பதும் இன்னொருபுறமிருக்க,நமக்கு கடுமையான பொருளாதராச் சுமையினை ஏற்படுத்தப் போகும் இலகுநீர் அணுஉலை (Light Water Reactor) ஏற்றுமதிக்காக அமெரிக்க அணுஉலை தயாரிப்பாளர்கள் சப்புக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஒரு என்ரான் அரங்கேறப் போகிறது! என்ரான் அவலத்திலிருந்து இந்தியா தப்பியதற்கு காரணமே இந்தியாவின் அதிர்ஷ்டம் மட்டுமே! ஏனென்றால், என்ரான் நிறுவனம் ஆக்ரோஷத்துடன் இந்தியாவை விழுங்கத் தோளையும் தொடையையும் தட்டி சிலாவரிசை எடுத்து வந்தபோது அதனுடைய உள்நோயால் திடீரென்று மாண்டுவிட்டது. இலகுநீர் அணு உலை இறக்குமதி செய்து இந்தியா போண்டியாகும்போது எதிர்காலத்தில் மீண்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்காது. நாட்டை போண்டியாக்கும் என்ரான் ஒப்பந்தத்தை, நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்ட மான்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இருந்த அதே அதிகாரிகள் படையும் மன்மோகன்சிங் தலைமையில் இருந்த அதே அரசியல்வாதிகள் படையும் இன்று இந்தோ-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகிறது. மக்களின் நினைவாற்றல் மிகக்குறைவு என்ற நப்பாசையிலும், பலவிஷயங்களைக் கொட்டி என்ரான் குளறுபடியை மூடிவிட்டதாக கற்பனை செய்வதனால், மீண்டும் என்ரானை மக்களின் நினைவுக்கு கொண்டுவர ஒரு சில வெளியீடுகளை அடுத்தடுத்து கொண்டுவர சல்லடை முடிவெடுத்திருக்கிறது