February 24, 2009

ஆஸ்கரின் குவியலரசியல்

ஸ்லம்டாக் மில்லியனர் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை குவித்து இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருது பெற்ற அனைவரும் சர்வதேச தரம் வாய்ந்த கலைஞர்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. அதுவும் இந்தியர்களின் குழு ஒன்று ஹாலிவுட் நகரை கலக்கிய நிகழ்ச்சியின் மூலம் நமது உடம்பில் புது ரத்தம் பாய்ச்சிய தெம்பு நம்மையறியாமலேயே வந்துவிடுகிறது. சேரன் செங்குட்டுவன் வட இந்தியாவை வென்று கனகவிசயர்கள் தலையில் கல்லை வைத்து தமிழகம் கொண்டு வந்த நிகழ்ச்சியை நினைத்து தமிழர்கள் அடையும் பூரிப்பிற்கு இணையாக இன்றைக்கு இந்தியர்கள் பூரிப்படைந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ரகுமான் இதுவரை இசையமைத்த பாடல்களிலே, படங்களிலே இதுவே மிகச் சிறந்தது என்று இசையுலக அறிஞர்களிடம் நாம் கூறினால், பலர் இக்கருத்திருலிருந்து மாறுபடுவர். இதுவரை சர்வதேச தரம் வாய்ந்த பொழுது போக்கு படங்கள் இந்தியாவில் எவ்வளவோ எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எதற்கும் ஆஸ்கர் விருது கிடைத்ததில்லை. ஆஸ்கர் விருது பொழுதுபோக்கு படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். ஃபீச்சர் ஃபில்ம்ஸ் என்று சொல்லப்படும் கலைப்படங்கள் இந்த விருதிற்கு போட்டியிட முடியாது. பொழுது போக்கு படங்கள் எடுப்பதிலும் கலைப்படங்கள் எடுப்பதிலும் சர்வதேச தரம் வாய்ந்த கலைஞர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள். பொழுது போக்கு படங்களில் இந்தியர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறையாகும். இப்பொழுதும் கூட டேனி பாயல் என்ற ஆங்கிலேயர் இயக்கிய படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்குதான் விருதுகள். ஆனால் இதில் பணியாற்றிய கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுத இப்பொழுது நான் விரும்பவில்லை. ஆனால் இந்தியக் கலைஞர்களில் சிறந்த திறமைசாலிகளை பொறுக்கி எடுத்து வேலை வாங்கியிருப்பதிலிருந்து, இப்படம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற படமாக மாற்றுவதற்கான திட்டமிடல் ஆரம்ப கட்டத்திலேயே அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்

கடந்த நான்கு நாட்களாக இப்படம் ஆஸ்கர் விருதைப் பெறப்போவது பற்றி தடபுடலாக அனைத்து ஊடகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் ஒருமாதத்திற்கு இதன் சூடு காப்பாற்றப்படும். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தின் ஏன் இந்திய நகரங்களின் தெருக்களில் இருபது ரூபாய்க்கு ஆஸ்கர் விருது வாங்கப்போகும் படத்தின் திருட்டு குறுந்தகடு பகிரங்கமாக விற்கப்பட்டதில்லை.

இதுபோன்று அனைத்து இந்தியர்களைபும் பெருமைப்பட வைத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவது ஒன்றும் நமக்கு புதிதல்ல. இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாலோ (அல்லது வெற்றி பெற வைக்கப்பட்டாலோ) உலக அழகிப் போட்டியில் இந்திய அழகி தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, நமது ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தீபாவளி கொண்டாட்டம்தான். அதற்கு பின்னாலிருக்கும் வியாபாரங்கள் பலருக்கு தெரியாது. இதையொட்டி விளம்பரங்களுக்காக கிரிக்கெட் வீரர்களுக்கும், உலக அழகிகளும் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்படுத்தப்படுவார்கள். இவர்கள் தங்களின்‘உலகப் புகழை‘ சில பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்துவார்கள். அவர்களும் எல்லா ஏற்பாடுகளுக்கும் ஆன செலவை வட்டியும் முதலுமாக மீட்டெடுப்பார்கள்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அமெரிக்காவானது, அதிலிருந்து மீண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளைபும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க அரசு வழங்கும் ஜாமீன் பெட்டகங்களை பெறும் நிறுவனங்கள் இந்தியர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று ஒரு புறம் வலியுறுத்திக் கொண்டே நாங்கள் உலகமயத்திலிருந்து சற்றும் வழுவில்லை என்றும் இந்தியாவானது அமெரிக்காவிற்கு சிறந்த சந்தையாக இன்னும் விளங்குகிறது என்றும் கூறி வருகிறது. இந்திய சந்தையை கையகப்படுத்தும் முயற்சி தொடர்ந்து வருகிறது. உலக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி கொண்ட இந்தியாவும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் ஆங்காங்கே தென்படும் சில பசுமை வயல்களை மேய்வதற்கு அமெரிக்கா எத்தனித்து வருகிறது. ஆகவே இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வியாபர நெருக்கடி அமெரிக்காவிற்கும் இருக்கிறது. இந்தியாவிற்கு உலகளவில் முக்கியத்துவம் கொடுத்து அதனுடன் தன்னையும் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு எப்பொழுதெல்லாம் அமெரிக்காவிற்கு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்த அது தவறுவதில்லை.

தற்போது இந்த ஆஸ்கர் விருதுகளின் மூலம் இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையை பிரபலப்படுத்தும் சத்தத்தின் பின்னனியில் நாம் காண்பதெல்லாம், மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு வாயிலுள்ள வடையை தவறவிட்டு சுகமாக பாடிக் கொண்டிருக்கும் காகம் பாடும் காட்சி மட்டுமே! வடையைத் தூக்கிகொண்டு ஓடத் தயாராயிருக்கும் அமெரிக்க நரியின் காட்சி மறைக்கப்படும் குவியலரசியல் அரங்கேறிவருகறிது. இதுவே ஆஸ்கர் விருதின் குவியலரசியலாகும்.