முப்பதே வயதான சங்கீதாவிற்கு உயிருடன் இருக்கும் நான்கு கணவர்கள். அதுவும் நான்காவது கணவன் தினேஷுக்கு இருபத்தேழு வயதுதான். சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொன்றுவிட்டு அவர்களின் உடமைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் சங்கீதாவும் தினேஷும் கைதாகியிருக்கிறார்கள். ஊடகங்களில் சுடச் சுடச் செய்தி பறக்கிறது. இது ஆறுவதற்கு இன்னும் ஒருமாதம் கூட ஆகலாம்.
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் 1,456 பில்லியன் டாலர்கள். அதாவது 72,800 கோடி இந்திய ரூபாய். இது Black money in Swiss Banks – Swiss Banking Association Report-2006ல் பெருமையாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள். இப்படி மூன்றாம் உலகநாடுகளில் கொள்ளயடிக்கப்பட்ட பணம் ஸ்விஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய்கள் முடங்கிக் கிடக்கிறது. வங்கித் தொழில் தர்மத்தை காப்பாற்றுவதாக கூறி கொள்ளையர்களை அடையாளம் காட்ட மறுக்கும் ஸ்விஸ் வங்கிகளின் தொழில் தர்மமானது, கூலிப்படையின் தலைவன் கொலை செய்ய ஏவல் செய்தவனை அடையாளம் காட்ட மறுக்கும் தர்மத்திற்கு ஒப்பானது! இப்படிப்பட்ட வங்கிகள் செயல்பாட்டு அடிப்படையே உலக சமூகதர்மத்தை மீறிய செயலாகும். ஆனாலும் இவைகள் பகிரங்கமாக இயங்குகின்றன. இப்படிப்பட்ட அமைப்புகளை முடக்குவதற்கு உலக அமைப்புகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே ஏன்? நிதி மூலதனத்தின் உலகமயமாகக்கலுக்கு உகந்ததாக தற்போதைய ஏற்பாடு இருக்கிறது என்பதால்தானே! இவைகளைப் பற்றிய செய்திகளும் ஏற்பாடுகளும் ஏன் ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? NDTV, CNN-IBN ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரு வாரத்திற்கு ஸ்விஸ் வங்கிகளின் இருத்தலுக்கான அதர்மத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பினால் ஸ்விஸ் வங்கிகள் தாக்குபிடித்து நிற்கமுடியுமா? நமது நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் மிக முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட, ஸ்விஸ் வங்கிகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்தான் மிகப் பெரியது. இதை ஏன் பாகிஸ்தானை எதிர்த்து கூக்குரலிடும் அமைப்புகள் கையிலெடுக்கவில்லை? இந்த அமைப்புகளுக்கும், ஸ்விஸ் வங்கிகளுக்கும் உள்ள தொடர்புகள் என்ன? போன்றவைகள் சாதாரண இந்திய குடிமகனை வாட்டி வதைக்கும் கேள்விகள்.
ஜனவரி 1, 2009, இனிய புத்தாண்டாக உலக மக்களுக்கு விடிந்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கோ துயரமான ஆண்டாக மலர்ந்து விட்டது. ஏனென்றால் அதன் மத்திய அலுவலகத்திலிருந்து 2.6 கோடி ரூபாய் பணம் காணாமல் போய்விட்டது. கட்சியின் உள் நிர்வாகிகள்தான் இதை திருடியிருக்க முடியும். அதன் முக்கிய நிர்வாகியான டாண்டன் மீது சந்தேக நிழல் படிய ஆரம்பித்ததது, அவரது பதவியும் பறிக்கப்பட்டது. எனினும், ஏன் பாஜக இதை ஒரு புகாராக காவல்துறையினரிடம் எடுத்துச் செல்லவில்லை? ஏனென்றால் இந்த 2.6 கோடி ரூபாய் என்பது கள்ளத்தனமாக பெறப்பட்ட பணம்; கணக்கில் வராத பணம். எனவே இவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது என்ற கொண்டாட்டம் திருடியவனுக்கு வந்துவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என்று முழித்த பாஜக தலைமை தனியார் உளவு அமைப்பினரை அணுகி இதை விசாரித்துத் தருமாறு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. பிறகு என்ன நடக்கும்? தனியார் உளவுத் துறை தன்னுடைய "திறமை" யை பயன்படுத்தி திருடனைக் கண்டுபிடித்து பாஜக தலைமையிடம் கூறிவிடும். பாஜக தலைமையும் தனியார் காவல்துறையை அணுகி திருடனிடமிருந்து பணத்தை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளும். 2.6 கோடியை முழுங்கிய திருடனும் சும்மா இருப்பானா? எல்லாம் தனியார் மயமான இந்த உலகில் அதே தனியார் உளவுத்துறையிடம் அணுகி வெட்ட வேண்டியதை வெட்டி திருட்டை ஜீரணித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைப்பான். கடைசியில் யாரோ ஒருவன் மாட்டிக் கொண்டு பாஜக அமர்த்தும் தனியார் கூலிப்படையால் கொல்லப்படுவான்.
நிதிமூலதனத்தின் உலகமயமாக்கலால் உருவான ஒழுக்கக் கேடுகள், சட்ட மீறல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு இயந்திரத்தால் முடியவில்லை. ஓழுக்கத்தின் அடிப்படையில்உருவாக்கப்பட்ட சட்டங்களால் ஒழுக்க மீறிலின் ஒழுக்கமீறலை எதிர்கொள்ள முடியாத முரண்பாடு உருவாகிறது. இந்த முரண்பாட்டின் உபவிளைவுதான் தனியார் உளவு நிறுவனங்கள், தனியார் காவல் அமைப்புகள், தனியார்மயமாக்கப்பட்ட தண்டிக்கும் அமைப்புகளான கூலிப்படைகள். அரசாங்கத்தையே நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் பாஜக போன்ற அமைப்பானது தன்னுடைய பிரச்சனைகளுக்காக இப்படி தனியார்களை அணுகுவது என்பது 'தனியார்'மய சீக்குப்பிடித்து அலைந்து கொண்டிருக்கும் அமைப்பிற்கு ஆச்சரியமான விஷயமல்ல.
காவல் அமைப்பில் தனியார்மயம் ஏற்படுத்திய தாக்கத்தை மனசாட்சியுடன் அலச வேண்டிய நமது சமூகத்தில் என்ன நடந்து வருகிறது? இதன் மோசமான விளைவுகளை அம்பலப்படுத்துவதற்கு பதில், இதன் உட்செய்தியை வெளியே தெரியாமல் தடுக்கும் குவியல் அரசியல்தான் (Politics of Dumping), சங்கீதா என்ற இளம் பெண்ணிற்கு நான்கு கணவர்கள் என்ற செய்தி. இனி எப்படி இந்த நான்கு பேரிடம் அவளுக்கு தொடர்பு ஏற்பட்டது. நான்கு பேரிடம் அவளது உறவுகள் பற்றிய அலசல்கள் ஊடகங்களால் கொட்டப்பட்டு, சாதாரண மக்களை எச்சில் ஒழுக 'சுவாரஸ்யமாக' ரசிக்க வைத்து, சங்கீத குழாயால் எலிகளை இழுத்துக் கொண்டு போய் தண்ணீரில் மூழ்கடித்த (Pide Piper of Hamilin) வேலையை குவியலரசியல் நடத்தும். இவளின் வாழ்க்கை ஒரு சினிமாப் படமாக கூட வெளிவரலாம்.
சங்கீதா என்ற பெண் ஒரு தனியார் உளவு நிறுவனத்தில் வேலை செய்து வந்தவள், கொல்லப்பட்ட சைதாப்பேட்டை தம்பதியினர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். சங்கீதா, கொல்லப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அவளது பணிநிமித்தமாக பலமுறை சென்றிருக்கிறாள் என்ற உண்மையின் மேல் அவளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய ‘சுவாரஸ்யமான‘ செய்திகளை கொட்டி மூடும் குவியலரசியல் நடந்து வருகிறது. தனியார் காவல் அமைப்பினால் நமது சமூகத்திற்கு ஏற்படும் கேடுகள் சைதாப்பேட்டை சம்பவம் மூலம் உணர்த்தப்பட போவதில்லை. சம்பந்தப்பட்ட தனியார் உளவு நிறுவனத்தின் பெயரைக் கூட பத்திரிக்கைகள் வெளியிடாமல் ‘கண்ணியம்‘ காத்து வருகிறார்கள். அண்ணா சாலையில் இயங்கும் ஒரு தனியார் உளவு நிறுவனம் என்ற செய்தியை வைத்து வாசகன் தன்னுடை பொது அறிவை பயன்படுத்தி Globus Detective Agency என்ற அமைப்பு ஒன்றுதான் அண்ணாசாலையில் இயங்குகிறது என்ற முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுதான் குவியலரசியலின் வெற்றி,
January 7, 2009
Subscribe to:
Posts (Atom)