December 6, 2008

அரசியல்மயமல்லாதாக்கலின் அரசியல் (Politics of Depoliticisation)

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; நடுத்தர வர்க்கத்திற்கு இளைத்தவன் அரசியல்வாதி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சகட்டுமேனிக்கு அடிவாங்குபவன் அரசியல்வாதி. அதுவும் சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளை கேலி செய்து ஒரு மெயில் அனுப்பி விட்டால் தேன் குடித்த நரியாகி விடுவார்கள். யார் எங்கிருந்து எழுதினார் என்று தெரிந்து ஆப்பு கிடைக்கும் என்ற நிலை இல்லை என்ற தைரியத்தில். அப்படியே தேடி வந்தாலும் எனக்கு மெயில் வந்தது சும்மா ஃபார்வட் பண்ணினேன் என்று சமாளிக்கலாம் என்ற தைரியம் வேறு. இதில் பலருக்கு ஐபி அட்ரஸை வைத்து யார் அனுப்பினார்கள் என்று கண்டுபிடிப்பது எளிது என்று தெரியாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள நிலை இதுதான். இந்த அரசியல்வாதிகளையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளவேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் ஆசை. இந்த ஆசை நிறைவேறினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டுமா?

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலங்கையை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆசையை தெள்ளத் தெளிவாக நிறைவேற்றி வைத்தவர்கள் விடுதலைப் புலிகளும், ஜனதா விமுக்தி பெருமுனா என்ற தீவிரவாத அமைப்பும். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமலஹாசனுக்கூட பெண்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை ஆனால் இலங்கையில் கிட்டத்தட்ட 1993க்கு முந்தைய அனைத்து அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டுவிட்டனர். அமிர்தலிங்கம் முதல் பிரேமதாஸா வரை அனைவரும் சாகடிக்கப்பட்டனர். ஆக இனிமேல் இலங்கையில் அரசியல்வாதிகள் தொல்லை இல்லை என்று ஆசுவாசப்பட்ட நமது நடுத்தரவர்க்கத்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை, இன்னொரு புதிய தலைமுறை அரசியல்வாதிகள் ஒரு சில ஆண்டுகளுக்குள் முளைத்துவிட்டனர்; அதே கொள்கைகளோடும் அதே நடைமுறைகளோடும்!

அன்று கிளை மட்டத்திலும் வார்டு மட்டத்திலும் இருந்தவர்கள் இன்று தேசிய மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். அப்படியானால் இன்று கிளைமட்டத்தில் யார் இருக்கிறார்கள்? அன்று வீட்டில் சும்மா இருந்தவர்கள் இன்று திண்ணை காலியானதும் கிளைமட்டத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். நாளை தேசிய மட்டத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மீண்டும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக் கட்டபடுவார்களேயானால் இன்று கிளை மட்டத்தில் இருப்பவர் நாளை தேசிய மட்டத்திற்கு வருவார். இன்று வீட்டில் சும்மா இருந்து கொண்டிருப்பவர் கிளைமட்ட அரசியல்வாதியாகிவிடுவார். நமது நாட்டிலும் இன்றுள்ள அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் இலங்கையில் நடந்தது போன்று புதிய தலைமுறை அரசியல்வாதிகள் முளைத்து விடுவார்கள் என்று ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆக அரசியல்வாதிகள் என்ற இந்த பீடையை ஒழிக்கவே முடியாதா?

எது அரசியல்வாதிகளை இப்படி உருவாக்குகிறது? வெறும் மாலிக்யூல்கள் மட்டுமே மிதந்து கொண்டிருந்த இவ்வுலகில் (பிரைமோவல் சூப் என்று உயிரியல் வர்ணிக்கிறது) ஒரு கட்டத்தில் DNA ஆக உருமாறி உயிர் தோன்றியதைப் போல், சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து அரசியல்வாதிகள் எப்படி உருவெடுக்கிறார்கள்? DNA உருவானதிற்கான புறச் சூழ்நிலை என்ன என்று ஒரு (விஷயம் தெரிந்த!) உயிரியல் மாணவனால் கூறமுடியும். ஆனால் அரசியல்வாதி உருவாவதற்கான சூழ்நிலை என்ன என்று இந்த சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினரால் கூற முடியாது ஏனென்றால் அந்த திசையை நோக்கி சிந்திப்பது என்ற ஸ்மரணையே அவர்களுக்கு கிடையாது.

இதோடு ஒட்டிய இன்னொரு கருத்தும் சைபர் உலக நமது நடுத்தர மக்கள் மத்தில் உலாவருகிறது. நம்மைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் எல்லாம் சரிப்பட்டு வராது. சர்வாதிகாரம்தான் வேண்டும். ஒரு நல்ல நாட்டுபற்றுடைய சர்வாதிகாரி வேண்டும். அதுவும் மிலிட்டரி ஆள் இருந்தா தான் கட்டுப்படுத்த முடியும். அது அது அதுபாட்டுக்கு இயங்கும். எந்த ஊழலும் இருக்காது. அவனவன் அவன் வேலையைப் பார்த்துட்டுப்போவான். சும்மா நடுத்தெருவில் மேடை போட்டு கத்திக்கிட்டிருக்க முடியாது. பாருங்க நம்ம இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்ஸி கொண்டு வந்தார்கள். என்னதான் சர்வாதிகாரம் என்று சொன்னாலும் ரயில் நேரத்திற்கு ஒடினது. கவர்னர் மாளிகையில் பைல்கள் பைசலாகி பறந்தன. இதுவும் அரசியல்வாதிகளை ஒழித்து கட்டிவிட்டு ராஜாங்கம் பண்ண வேண்டும் என்ற ஆசைதான். அதுவும் ரஜினி படத்தை பார்த்து, பார்த்து, யாராவது நமக்காக சண்டை போட்டு எல்லவற்றையும் சரி செய்து விடமாட்டார்களா, நாம் பாட்டு நமது வேலையை பார்த்துக் கொண்டே அவ்வப்போது டிவியை பார்த்துவிட்டு ஒன்னு ரெண்டு இமெயில் அனுப்பிவிட்டு பொழுதைக் கழிக்க முடியதா என்ற நப்பாசையால் வந்தது இந்த ஆசை.

இதற்கும் உதாரணமாக திகழுகிறது நமக்கு வடமேற்கு அண்டை நாடு. நமக்கு 12 மணிநேரம் முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, முடிந்து விட்ட 61 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகாரம்தான். அதுவும் ராணுவ சர்வாதிகாரம். அதிகார பரிணாம வளர்ச்சி எப்படியிருக்கிறது? அரசியல்வாதிகள், ராணுவம், உளவு, சண்டியர்கள் ஆகிய நான்குமுனை அதிகார மையங்கள். எதன் கீழும் எதுவும் இல்லை. சண்டியர்களை கட்டுப்படுத்த உளவுத்துறை நினைத்தால் ராணுவத்துடன் சண்டியர்கள் கூட்டு சேர்ந்து உளவுத்துறையை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் ராணுவத்தை கட்டுப்படுத்த நினைத்தால் மற்ற மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளை தீர்த்துக் கட்டிவிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் பெனாஸிர்).

அரசியல் என்றால் என்ன புரிதலில் உள்ள போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.

தற்போது நடைபெற்று வரும் தள்ளுமுள்ளுகள் மேல் மட்டத்தில் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் போல் தெரிந்தாலும், அடிமட்டத்தில் பொருளாதாரக் குழுக்களின் போராட்டமே நடைபெற்றுவருகிறது. அடிமட்டத்தில் நடைபெறும் போராட்டத்தை வெளியில் தெரியாமல் தடுப்பதற்கான ஏற்பாடே மேடை அரசியல் உள்ளிட்ட அம்சங்கள்; இவற்றால் மக்கள் வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் காட்சிகளான சவால்கள், அறிக்கைகள், பாதுகாப்பு பந்தாக்கள், விமானப்பயணங்கள் போன்ற அம்சங்கள் உண்டு, இதையும் தாண்டி துருத்திக் கொண்டு அடிமட்ட விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததால், depoliticise செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது.

சாக்கடை அரசியலுக்கு மாற்று தன்னார்வக்குழுக்கள் (NGO)என்ற கோட்பாடும் தற்போது முன்வைக்கப்படுகிறது. இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடானாது, அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாரதாரக் குழுக்களின் போராட்டத்தில் அக்குழுக்களின் பலங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதற்காகவே இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவிதத்தில் இவைகள் depoliticisaion போக்கிற்கு பங்களிக்கின்றன. ரஜினிப்பட பார்வையாளர் போல் யாராவது வந்து எதாவது நமக்காக செய்துவிடமாட்டார்களா என்ற நப்பாசை இல்லாத ஒரு நடுத்தரவர்க்க பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசியல் மேல் அசூயை இருக்கிறது. இவர்களுக்கு வடிகாலாக உள்ளதுதான் NGO. இதுவும் இல்லாவிட்டால் பொறுமை மீறி இவர்களும் அரசியலுக்கு வந்துவிட்டால் அடிமட்டத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தின் விளைவே NGO ஏற்பாடு. NGOக்களும் Micro Levelலில் சிறு மாற்றங்களை உண்டாக்கி ஆத்ம திருப்தி அடைந்து விடுவார்கள். Macro Levelல் எந்த மாற்றமும் ஏற்படாமல் Status quo maintain ஆகிவிடும்

Depoliticising ஏற்பாட்டிற்குள் ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலையை மாற்றியமைப்பதை தடுக்கும் நோக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை dirty politicians போன்ற நடுத்தர வர்க்க கருத்தியல்கள் depoliticisation ஏற்பாட்டிற்கு உதவிகரமாக உள்ளது. ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலை எந்த பொருளாதாரக் குழுவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துவிடும். ஆனால் இந்த depoliticisation என்ற போக்கானது நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே பொருந்துகிறது. இவர்களே சமூகத்தில் கருத்தியல்கள் ஏந்திச் செல்பவர்கள். Concernt Manufacturers ஆனால் இதையும் மீறி அடித்தட்டு மக்களின் அரசியல் பங்கெடுப்பு என்பது அதிகரித்து வருகிறது. ‘சாக்கடை அரசியலை‘ நடுத்தர வர்க்கம் புறக்கணித்தாலும் மக்கள் திரள் புறக்கணிக்கத் தயாரில்லை. இன்றுவரை நடைபெற்றுவந்திருக்கின்ற தேர்தல்களில் மக்கள் பங்கெடுப்பு என்பது 60 சதத்திற்கு மேலும் இடதுசாரிகள் பலமாயுள்ள மாநிலங்களில் 75 சதத்திற்கு மேலும் இருந்திருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தல் இருந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில வாக்குப்பதிவு 60ஐ தாண்டிவிட்டது. பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போக்கின் பலமான செய்தியே இந்த பெருந்திரள் மக்கள் பங்கெடுப்பு.

இதை மட்டுப்படுத்த Depoliticisation ஏற்பாடும் பலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் ஊடகங்களில் வரும் கட்டுரைகளும், சைபர் உலக இமெயில் சங்கலிகளும். குறிப்பாக மந்திரிகள் செய்யும் செலவுகள், பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு விஐபிகளுக்கான பாதுகாப்பு செலவுகள் என்பதை absolute termல் கோடிகளில் காண்பித்து சில ஆயிரங்களைக் கூட பார்க்காத சாதாரண மக்களை கோடிகளில் கணக்கு காட்டினால் தெண்டச் செலவுகள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளடங்கியிருக்கிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட் தொகையுடனோ, உள்நாட்டு மொத்த உற்பத்தியுடனோ இந்த தொகைகளை ஒப்பீடு செய்தால் இவை அனைத்தும் சொற்பத் தொகைகளே. அரசியல்வாதிகள் பந்தாக்களும் தெண்டச் செலவுகளையும் நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்த பந்தாக்களாலும் தெண்டச் செலவுகளாலும் நொந்து போயிருக்கின்ற மக்களுக்கு இந்த தெண்டச் செலவுகள் சில கோடிகளில் உள்ளது என்ற நம்பர்களை கொடுத்தால் மேலும் கோபம் அதிகமாகி depoliticisaiton போக்கு துரிதப்படும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும்.

நாம் அறிந்தோ, அறியாமலே பிரமுகர்களாக வளர்ந்துவிட்ட அரசியல்வாதிகள் அவர்கள் உதிர்க்கும் கருத்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்றால் அதிக பணம் செலவழித்து உயிரை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்டிடியினருக்கு எதிராக கருத்துக் கூறிக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவையோ சு.சாமியையே அவர்களின் குண்டுகளுக்கு இரையாகும்படி அனுமதிக்க முடியாது. பஞ்சாப் தீவிரவாதம் முழுவீச்சில் இருந்தபொழுது ஹரிகிஷன்சிங் சுர்ஜித் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் அதற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பியதால் அவரது உயிரை எடுக்க நடைபெற்ற முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு காரணம் அவருக்கு இஜட் பிரிவு பாதுகாப்பு கொடுத்ததால்தான் என்பதை மறுக்கமுடியாது. காஷ்மீரில் முகமது தாரிகமி உள்ளிட்ட அரசியல்வாதிகள் இஜட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு இருப்பதால்தான் இன்றுவரை உயிரோடு இருக்க முடிகிறது. இந்த இரு அரசியல் வாதிகளும் சென்னை வந்தபொழுது வெறும் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு சென்னை தெருக்களில் உலாவந்ததை காணமுடிந்தது. இதே நபர்கள் அவர்கள் மாநிலங்களுக்குச் சென்றால் கடுமையான பாதுகாப்புடனே நடமாட முடிந்தது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்களிடம் அடையாளம் காட்டாமல் பந்தா அரசியல்வாதிகளை மட்டுமே படம் பிடித்து அசூயையை உருவாக்கும் ஏற்பாட்டை நம்மால் ஏன் புரிந்து கொளள முடியவில்லை. இதற்கான செலவுகளை எல்லாம் வெட்டி, அவர்கள் செத்தால் சாகட்டும் என்று விட்டு விட்டால் அண்டை நாட்டில் உள்ளது போல் சண்டியர்கள் ஒரு அதிகாரமையமாக உருவெடுப்பார்கள். இதை சாதாரண மக்களும் விரும்பவில்லை. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் விரும்பவில்லை, ஒருவேளை இவர்களுக்கு தேவைப்பட்டால் தங்களுக்கு கட்டுப்பட்ட சண்டியர் அதிகார மையத்தை உருவாக்கிவிடுவார்கள் என்பதிலும் நாம் அண்டை நாட்டு உதாரணத்திலிருந்து கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் சண்டியர் அதிகார மையம் உருவாவதை நாம் அனுமதிக்க முடியாது ஏனென்றால் அது பொருளாராக் கோரிக்கைளுக்கும் Empowermentக்குமான போராட்டம் அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார மக்கள் குழுக்களின் பலத்தை மாற்றியமைக்கும் தன்மைகொண்டதாகவே இது அமையும்.

5 comments:

குழலி / Kuzhali said...

மிக பொருத்தமான ஒரு படைப்பு, அரசியல் என்றால் என்ன என்ற புரிதலோ அதற்கான எந்த முயறிச்சியுமே இல்லாமல் வெறும் வாக்கு அரசியலை மட்டுமே அரசியலாக பார்க்கின்ற சூழலில் இந்த கட்டுரை தெளிவு தர முயற்சிக்கிறது.

ஆனால் எல்லா கம்யூனிஸ்ட்களும் எல்லாவற்றையும் வர்க்க வேறுபாட்டில் போய்தான் நிறுத்துவார்கள் என்பதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல என்பதற்கிணங்க நீங்களும் கடைசியாக வர்க்க வேறுபாட்டில் வந்து நிறுத்தி இருக்கின்றீர்...

வர்க்க வேறுபாட்டு அரசியலை விட இன்று(மட்டுமல்ல என்றுமே) Priority politics என்பதுவே எல்லா அரசியலையும் தீர்மாணிக்கின்றது.... நான் யாருக்கு வாக்களிக்கனும் என்பதை என் கொள்கைகள் எட்செட்ர்ரா எல்லாவற்றையும் தாண்டி தீர்மாணிப்பது என் Priority politics தான்.... அந்த நேரத்தில் எது எனக்கு(அல்லது மக்களுக்கூ அல்லது இனக்குழுவுக்கு) அதிக முக்கியம் என்பதே அந்தந்த நேரத்து அரசியலை தீர்மாணிக்கின்றது.... வெறும் வர்க்க வேறுபாடு அரசியலை தீர்மாணிப்பதில்லை.....


போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றறொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.

Anonymous said...

Very good Article.
//யாராவது வந்து எதாவது நமக்காக செய்துவிடமாட்டார்களா என்ற நப்பாசை இல்லாத ஒரு நடுத்தரவர்க்க பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசியல் மேல் அசூயை இருக்கிறது//
After mumbai bomb blast the middle class section completly blamed politician. some NGO organisation in mumbai conduct rally against all politician for mumbai blast.If economic failure / law and order they wont leave even opposition parties.
They need petrol /diesel prices should be reduced, if any political parties protest against price rise they will blame the politician's for trafic jam.
They will support if govt use ESMA against govt employees.
Basic reason they completly trust the print media/electronic media.
The question is when they will realise??

Hariharan Doha

Vijayan said...

கம்யூனிஸ்ட் என்ற அடைமொழி எனக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. பொதுபுத்தியாக வளர்ந்துவிட்ட ஒரு கருத்தை யாராவது மறுத்தால் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்ற அடைமொழியுடன் அழைப்பது வாடிக்கையாகிவிட்டது. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் கமலஹாசனை வேலைக்கான பேட்டி எடுக்கும் அதிகாரி நீ ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்பது இந்த பொதுபுத்தியின் அடிப்படையில் அமைந்த இயல்பான காட்சிதான். எனவே எனக்கு இது விஷயமல்ல. பொருளாதார விஷயங்களே அனைத்திற்கும் அடிப்படை என்பதே எனது கருத்து. காசேதான் கடவுளடா என்று எழுதிய கண்ணதாசன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. என்னதான் அர்ச்சகர் மந்திரம் சொன்னாலும், கடவுளின் அருள்கிடைத்தாலும், அர்ச்சகரின் தட்டில் பக்தன் செலுத்தும் காணிக்கையைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் உண்டாகும் ஒளியை, ஆலை வாசலில் கையெழுத்திட்டு போனஸ் பெற்றுக் கொண்ட ஊழியரின் முகத்தில் அப்போது மட்டும் தெரியும் ஒளியுடன் நம்மால் எளிதில் ஒப்பிடமுடியும். சமூகம் முழுமையும் உழைத்து செல்வத்தை உருவாக்குகிறது. அந்த செல்வத்தை பங்கிடுவதில் போட்டி இருக்காது என்று யாராலும் கூறமுடியாது. திருடர்கள் கூட்டாக திருடிய செல்வத்தை பங்கிடுவதில் சண்டை ஏற்பட்டு அதிருப்தி அடைந்த திருடன் மொத்த திருட்டையும் காண்பிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்ததில்லையா? இது கொச்சையாக தெரிந்தாலும் மேல்மட்டத்தில் நடைபெறுவதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இதே போட்டி தினமும் நடக்குமானால் அது அடிமட்டப் போராட்டமாகவே மாறிவிடும். மேல் மட்டத்தில் பலவித சித்து விளையாட்டுகளும் வேடிக்கைகளும், கேளிக்களும் நிரப்பி அடிமட்ட நிகழ்வுகளை மூடிமறைத்துவிடும். நமது சினிமாக்களில் கூட பாடல் காட்சிகளில் பின்னனியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் காண்பிக்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளையே நான் அரசியல் என்கிறேன். இந்த போட்டிகளில் அவரவருக்கு கிடைப்பது அவரவர்களின் பலத்தை பொருத்தது. அவரவர்களின் பலத்தை பெருக்கும் நடவடிக்கையே அரசியல் என்கிறேன். இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தால், நியாயமான பங்கீடு கிடைக்காமல் ஏமாந்து போகும் அணியின் பக்கமே எனது சார்பு நிலை இருக்கிறது. ஏமாந்து போகிறவரின் கவனத்தை திசைதிருப்பி நியாயமற்றவகையில் பங்கீட்டை பெறுபவர் செய்யும் தந்திரமே மேல் மட்டத்தில் நடைபெறுகிறது. இதையே அரசியல் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். எனவே இந்த தந்திர நடவடிக்கைகளுக்குள் சென்று மாட்டிக் கொள்ளாமல், ஏமாந்து போகிறவனுக்கு நியாயம் வழங்குவதில் கவனம் செலுத்துங்கள் என்றே நான் கோரிக்கை வைக்கிறேன். Depoliticisation என்பது ஏமாந்து போகிறவனை ஏமாளியாக்கும் தந்திரமே. ஆகவே இந்த தந்திரத்திற்கு இரையாகவேண்டாம் என்பதே நான் வலியுறுத்த விரும்பும் கருத்து.

Anonymous said...

அரசியவதிகளைப் பற்றிய அவதுர்றுகளை பரப்பும் நடுத்தர வர்கத்தின் பொறுப்பு அற்ற சிந்தனைகளை அலசியுள்ளீர்கள்...
அரசியலில் அவர்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் வரும் வரை தற்போதைய அரசியல் நிலைமைகளை மற்ற இயலாது, என தெரியாமலும், தெரிந்தும் சுய நலத்தோடு யாராவது வந்து திருதட்டுமே என்றும் பிதற்றி கொண்டிருகிரார்கள்
இந்த நடுத்தர வர்க்க எண்ணம் அரசியலில் மட்டும் இல்லை, பல தொழிற்ச்சாலைகளிலும் அதன் சங்க தேர்தல் மற்றும் பேச்சு வார்த்தைகளின் போதும் கூட மிக அதிகளவில் தென்படுகிறது இந்த கருத்தியல் தளத்தில் போதிய கவனத்தை முற்போக்கு அரசியல் இயக்கங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் சர்வதிகாரம் பற்றிய பேச்செல்லாம் விரக்தின் வெளிப்பாடுகளே அவர்களுக்கும் தெரியும் அது ஆபத்தானதென்று...எல்லா புரட்ட்சிகளுமே ஏதாவது ஒரு அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ அழித்து விட்டுதான் பிறக்கிறது. விடுதலைப்புலிகள் அரசியல் தலைவர்கள் அனைவரையும் கொள்ள வேண்டும் என்ற நோக்கமில்லாதவர்கேள.... ஹரிகிஷன்சிங் சுர்ஜித் பாதுக்கப்பை மற்ற இருவருடன் ஒப்பிட முடியாது
இலங்கை விவகாரத்தில் இந்த இருவரின் நிலைப்பாட்டில் இருக்கும் ந.வரதரஜனுக்கோ அவர் கட்சிஎல் இருப்பவர்களுக்கோ இந்த பாதுகாப்பு தேவைப்படவில்லையே...
எந்த தலைவருக்கான பாதுகாப்பு தேவையானது எவரின் பாதுகாப்பு பந்த என மக்கள் அலசி ஆரோகியமான ஒரு முடிவெடுப்பது என்ன்பதெல்லாம் நடந்து விட்டால், அவர்களிஎடம் அரசியல் வாதிகளைப் பற்றிய இந்த எண்ணங்கள் எல்லாம் வராது

நா.நாராயணன்

Anonymous said...

Very shorts, simple and easy to understand, bet some more comments from your side would be great